CricketArchive

அமித் மிஸ்ரா பந்து வீச்சில் டெல்லி வெற்றĬ
by CricketArchive


Scorecard:Delhi Daredevils v Deccan Chargers
Player:A Mishra
Event:Indian Premier League 2007/08

DateLine: 15th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 37-வது தகுதிச் சுற்று ஆட்டம்
இடம் : பெரோஷ் ஷா கோட்லா மைதானம். டெல்லி.
தேதி : 15.05.2008. வியாழக் கிழமை.
மோதிய அணிகள்: டெல்லி அணி - டெக்கான் அணி.
முடிவு: 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.
ஆட்ட நாயகன்: அமித் மிஸ்ரா.

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 37-வது ஆட்டம் இன்று இரவு தில்லியிலுள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணியும் டெக்கான் அணியும் மோதின. இதில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத டெக்கான் அணியின் கேப்டன் வி.வி.எஸ்.லட்சுமண் இப்போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார்.

காயம் குறித்து லட்சுமண் தெரிவித்ததாவது 'கையில் ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு பேட்டைத் தூக்கவே முடியாத அளவிற்கு வலியால் அவதிப்படுகிறேன். ஸ்கேன் செய்து பார்த்ததில் அடுத்த 15 நாட்களுக்கு ஆடமுடியாது என தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன்' என்றார்.

கடந்த போட்டியில் விளையாடிய டெல்லி வீரர்களான டி வில்லியர்ஸ், யோ மகேஷ், சங்வான் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரஜத் பாடியா, முகமது ஆசிப் ஆகியோர் இப்போட்டியில் சேர்க்கப்பட்டனர்.

அதே போல டெக்கான் அணியிலும் சஞ்சய் பாங்கர், சமிந்தா வாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஷாகித் அப்ரிடியும் சர்வேஷ் குமாரும் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையா வென்ற டெக்கான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் காம்பீரும் களமிறங்கினர்.

சொந்த மண்ணில் களமிறங்கிய வீரேந்திர ஷேவாக் அதிரடியை காட்டுவார் என்று நினைத்திருந்த ரசிகர்களை ஏமாற்றினார். அவர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் விஜய்குமார் பந்து வீச்சில் ஆர்.பி.சிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து கெளதம் காம்பீருடன் ஷீகர் தவான் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர். டெக்கான் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த கெளதம் காம்பீர் 48 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், ஏழு பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஷீகர் தவானுடன் ஜோடி சேர்ந்த இலங்கை வீரர்களான தில்ஷான், மஹரூப் ஆகியோர் தங்கள் பங்கிற்கு 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசிவிட்டு ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ஷீகர் தவான் 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 68 ரன்களுடனும் மனோஜ் திவாரி 4 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெக்கான் அணி சார்பில் பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகளையும், விஜய்குமார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். ஆர்.பி.சிங் 4 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 50 ரன்களை வாரி வழங்கினார்.

இதையடுத்து 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெக்கான் அணி களமிறங்கியது.

ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் துவக்க ஆட்டக்காரராக ஷாகித் அப்ரிடி களமிறங்கினார்.

இவர்கள் இருவரும் எதிர் பார்த்தபடி சரியான துவக்கத்தை அளித்தனர். ஆனால் அதிரடியாக ஆடிய ஆடம் கில்கிறிஸ்ட் 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் எடுத்திருந்த போது மெக்ரத் பந்துவீச்சில் தில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஷாகித் அப்ரிடியுடன் ஹெர்சல் கிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் டெல்லி அணியினரின் பந்து வீச்சை வாணவேடிக்கை காட்டி அணியின் எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினர். டெக்கான் அணி 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இந்நிலையில் 7வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா அந்த ஓவரின் முதல் பந்திலேயே அப்ரிடியை வெளியேற்றினார். அப்ரிடி 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறு முனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹெர்சல் கிப்ஸும் 22 ரன்கள் எடுத்திருந்த போது மிஸ்ராவின் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களிருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்தனர்.

 

இவர்களையடுத்து ரோஹித் சர்மாவும் ஸ்காட் ஸ்டைரிஸும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் சர்மா மஹரூப்பின் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஸ்காட் ஸ்டைரிஸுடன் ஜோடி சேர்ந்த வேணுகோபால் ராவ் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

29 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டைரிஸ் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வேணுகோபால் ராவ் 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்ரத் பந்துவீச்சில் சோயிப் மாலிக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய வீரர்களை அமித் மிஸ்ரா ஹாட்ரிக் முறையில் அடுத்தடுத்து வெளியேற்றினார். ரவி தேஜா 9 ரன்களிலும் பிரக்யான் ஓஜா ரன் ஏதும் எடுக்காமலும் ஆர்.பி.சிங் 1 ரன்னும் எடுத்திருந்தபோது மிஸ்ராவின் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.

இப்போட்டிகளில் சென்னை வீரர் பாலாஜிக்குப்பிறகு, ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அமித் மிஸ்ரா பெற்றார்.

ஆட்டநேர முடிவில் டெக்கான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றுப்போனது.

டெல்லி அணி சார்பில் அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணிக்கு வெற்றி தேடித் தந்த அந்த அணியின் வீரர் அமித் மிஸ்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மெக்ரத், மஹரூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்ற டெல்லி அணி 5 வது இடத்தில் உள்ளது.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive