CricketArchive

3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி
by CricketArchive


Scorecard:Kolkata Knight Riders v Chennai Super Kings
Player:M Ntini
Event:Indian Premier League 2007/08

DateLine: 18th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவு ஆட்டம்), 41-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா.
தேதி: 18.05.2008. ஞாயிற்றுக் கிழமை.
மோதிய அணிகள்: கொல்கத்தா அணி - சென்னை அணி
முடிவு: 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: மகாய நிடினி

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 41-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மாலை கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணியும் சென்னை அணியும் மோதின. இதில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் விளையாடிய கொல்கத்தா வீரர் ஆகாஷ் சோப்ரா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டி.பி.தாஸ் சேர்க்கப்பட்டார்.

அதே போல சென்னை அணியில் கபுகேதரா, ஜோஹீந்தர் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பார்தீவ் படேல், மகாய நிதினி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையா வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி சல்மான் பட்டுடன் துவக்க ஆட்டக்காரராக முகமது ஹபீஸ் களமிறங்கினார். முதல் ஓவரை மகாய நிதினி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தினை பிடிக்க முயன்ற சென்னை அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மஹேந்திரசிங் தோனியின் கை விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் உடனடியாக களத்திலிருந்து வெளியேறினார்.

நல்ல வேளையாக இன்றைய போட்டியில் பார்தீவ் படேல் சேர்க்கப்பட்டிருந்ததால் அவர் கீப்பராக செயல்பட்டார். தோனிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை தற்காலிகமாக ஸ்டீபன் பிளெமிங் ஏற்றுக் கொண்டார்.

அதிரடியாக ஆட நினைத்த கொல்கத்தா அணியை நிதினியின் பந்துவீச்சு நிதானமாக ஆட வைத்தது.

நிதானமாக ஆடிய கொல்கத்தா வீரர் முகமது ஹபீஸ் 6 ரன்கள் எடுத்திருந்தபோது நிதினி பந்து வீச்சில் மன்பிரீத் கோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சல்மான் பட்டுடன் கொல்கத்தா அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி ஜோடி சேர்ந்தார்.

சொந்த மண்ணில் களமிறங்கிய கங்குலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைத்திருந்த உள்ளூர் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யாமல், 2 ரன்கள் அடித்த திருப்தியோடு நிதினி பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து சல்மான் பட்டுடன் டி.பி.தாஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அணியின் எண்ணிக்கை 16.1 ஓவர்களில் 114 ரன்களாக இருந்தபோது டி.பி.தாஸ் நிதினி பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது அவரது எண்ணிக்கை 27 ஆகும். இவரையடுத்து வந்த டேவிட் ஹஸியும் ரன் ஏதும் எடுக்காமல் நிதினி பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் ஹஸியின் விக்கெட் நிதினிக்கு ஹாட்ரிக் விக்கெட்டாக அமைந்தது. இப்போட்டிகளில் சென்னை வீரர் பாலாஜி, டெல்லி வீரர் அமித் மிஸ்ராவிற்கு பிறகு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையும், சென்னை அணியில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் நிதினி பெற்றார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நிதினி வீழ்த்திய மூன்று விகெட்டுகளும் ஸ்டம்புகளை பதம் பார்த்தது என்பதுதான்.

சல்மான் பட் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர் 10 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் எடுத்திருந்த போது பாலாஜி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து வந்த வீரர்களான லக்ஷ்மி சுக்லா 13 ரன்களுடனும் விரித்தமன் சஹா 15 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நேர முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் மகாய நிதினி அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாலாஜி 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதையடுத்து 20 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை அணி களமிறங்கியது.

பார்தீவ் படேலும், ஸ்டீபன் பிளெமிங்கும் தொடக்க ஆட்டக்கார்ரகளாக களமிறங்கினர்.

பார்தீவ் படேல் நிதானமாகவும் ஸ்டீபன் பிளெமிங் அதிரடியாகவும் விளையாடினர். 8 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த காற்று வீசியது.

அப்போது குறுக்கிட்ட பலத்த காற்றால் ஈடன் கார்டன் மைதானத்திலிருந்த 4 மின் கோபுரங்களில் சில பல்புகள் உடைந்து விழுந்தன. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மழையும் கொட்டியது.

90 நிமிடம் காத்திருந்ததற்குப் பிறகு பருவநிலையில் முன்னேற்றம் காணப்படாததால் டக்-வொர்த் லீவிஸ் விதிகளின்படி சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கோல்கத்தா அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களைச் சேர்த்திருந்தது.

பார்தீவ் படேல் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 19 ரன்களுடனும் ஸ்டீபன் பிளெமிங் 20 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 32 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

21 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மகாய நிதினி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

சென்னைக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. இதனால் கிடைத்த 2 புள்ளிகளுடன் மொத்தம் 14 புள்ளிகளைச் சேர்த்த சென்னை அணி தர வரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப்பிடித்து, தனது அரையிறுதி வாய்ப்பை மிகவும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive