CricketArchive

பிராவோ அதிரடியால் மும்பை அணி வெற்றி
by CricketArchive


Scorecard:Deccan Chargers v Mumbai Indians
Player:DJ Bravo
Event:Indian Premier League 2007/08

DateLine: 18th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 42-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ராஜிவ்காந்தி சர்வதேச மைதானம். ஹைதராபாத்.
தேதி: 18.05.2008. ஞாயிற்றுக் கிழமை.
மோதிய அணிகள்: மும்பை அணி - டெக்கான் அணி
முடிவு: 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஆட்ட நாயகன்: டிவைன் பிராவோ.

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 42-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு ஹைதராபாத்திலுள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மும்பை அணியும் டெக்கான் அணியும் மோதின. இதில் 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் விளையாடிய மும்பை வீரர்களான ராஜேஷ் பவார், ஷான் பொல்லாக் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பீனல் ஷா, தில்ஹாரா பெர்னாண்டோ ஆகியோர் இப்போட்டியில் சேர்க்கப்பட்டனர்.

அதே போல டெக்கான் அணியிலும் ஹெர்சல் கிப்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், சர்வேஷ் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சமர சில்வா, நுவன் சொய்சா, ஹல்ஹதார் தாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையா வென்ற டெக்கான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூர்யாவும் மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கரும் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர்.

ஜெயசூர்யா 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 35 ரன்கள் எடுத்திருந்த போது வேணுகோபால்ராவ் பந்து வீச்சில் ஆர்.பி.சிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து சச்சின் தெண்டுல்கருடன் தோர்நெலி ஜோடி சேர்ந்தார்.

சச்சின் தெண்டுல்கர் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் எடுத்திருந்த போது ஷாகித் அப்ரிடி பந்து வீச்சில் சமர சில்வாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

சச்சின் ஆட்டமிழந்தபோது மும்பை அணி 8.2 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இவரையடுத்து தோர்நெலியுடன் அபிஷோக் நாயர் ஜோடி சேர்ந்தார். தோர்நெலி 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவரையடுத்து வந்த ராபின் உத்தப்பாவும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவர்களையடுத்து அபிஷோக் நாயரும் டிவைன் பிராவோவும் ஜோடி சேர்ந்து டெக்கான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

24 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களை விளாசிய அபிஷோக் நாயர் 18.4 வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களை விளாசிய டிவைன் பிராவோவும் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த பீனல் ஷா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த 3 விக்கெட்டுகளையும் ஆர்.பி.சிங் வீழ்த்தினார். தகாவாலே 5 ரன்களுடனும் ரோஹன் ரஜே 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

டெக்கான் அணி சார்பில் ஆர்.பி.சிங் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் ஷாகித் அப்ரிடி, வேணுகோபால் ராவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெக்கான் அணி களமிறங்கியது.

ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் துவக்க ஆட்டக்காரராக ஷாகித் அப்ரிடி களமிறங்கினார்.

இவர்கள் இருவரும் எதிர் பார்த்தபடி சரியான துவக்கத்தை அளிக்கவில்லை. அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமல் தில்ஹாரா பெர்னாண்டோ பந்துவீச்சில் பீனல் ஷாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆடம் கில்கிறிஸ்டும் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் எடுத்திருந்த போது டிவைன் பிராவோ பந்துவீச்சில் தோர்நெலியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து வந்த ரோஹித் சர்மாவும் 6 ரன்களிலும், சமர சில்வா 17 ரன்களிலும் ஆட்டமிழக்க டெக்கான் அணி 9.1 ஓவர்களில் 56 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்க்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இந்நிலையில் வேணுகோபால் ராவும் ரவி தேஜாவும் ஜோடி சேர்ந்து மும்பை அணியினரின் பந்து வீச்சை வாணவேடிக்கை காட்டி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாக ஆடிய வேணுகோபால் ராவ் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்தபோது டிவைன் பிராவோ பந்துவீச்சில் பீனல் ஷாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரவி தேஜா 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் எடுத்திருந்தபோது டிவைன் பிராவோ பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நுவன் சொய்சாவும் ஹல்ஹதார் தாஸும் ஜோடி சேர்ந்தனர்.

ஹல்ஹதார் தாஸ் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

நுவன் சொய்சா 10 ரன்களுடனும் ஆர்.பி.சிங் 3 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்டநேர முடிவில் டெக்கான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

சச்சின் தெண்டுல்கரின் தலைமையில் செயல்பட்ட மும்பை அணி இந்த ஆட்டத்தில் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தியது.

மும்பை அணி சார்பில் டிவைன் பிராவோ மிகச்சிறப்பாக பந்துவீசி டெக்கான் அணியின் ரன் எடுக்கும் வேகத்தினை கட்டுப்படுத்தினார். அவர் 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தில்ஹாரா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் நாயர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

டிவைன் பிராவோ ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive