CricketArchive

வீழ்ந்தது கொல்கத்தா... வென்றது மும்பை...
by CricketArchive


Scorecard:Mumbai Indians v Kolkata Knight Riders
Player:SM Pollock

DateLine: 16th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 38-வது தகுதிச்சுற்று ஆட்டம
இடம்: வான்கடே மைதானம். மும்பை.
தேதி :16.05.2008. வெள்ளிக் கிழமை.
மோதிய அணிகள்: மும்பை அணி - கொல்கத்தா அணி
முடிவு : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: ஷான் பொல்லாக்

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 38-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

 

கடந்த போட்டியில் விளையாடிய கொல்கத்தா வீரர்களான தடேன்டா டைபு, இக்பால் அப்துல்லா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முகமது ஹபீஸ், அஜித் அகார்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 

அதே போல கடந்த போட்டியில் விளையாடிய மும்பை வீரரான தவால் குல்கர்னி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராஜேஷ் பவார் சேர்க்கப்பட்டார்.

 

பூவா தலையா வென்ற மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் முதலில் எதிரணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

 

அதன்படி கொல்கத்தா அணி சார்பில் சல்மான் பட்டுடன் துவக்க ஆட்டக்காரராக ஆகாஷ் சோப்ரா களமிறங்கினார்.

 

ஆகாஷ் சோப்ரா வந்த வேகத்தில் 1 ரன் எடுத்து, ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

இதையடுத்து சல்மான் பட்டுடன் கொல்கத்தா அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி ஜோடி சேர்ந்தார்.

 

சௌவுரவ் கங்குலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைத்திருந்த ரசிகர்களை ஏமாற்றினார். அவரது ஆட்டம் டெஸ்ட் போட்டியில் ஆடுவதைப்போல் இருந்தது.

 

சல்மான் பட் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 13 ரன்கள் எடுத்திருந்த போது ஷான் பொல்லாக் பந்து வீச்சில் தெண்டுல்கரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து கங்குலியுடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

 

டேவிட் ஹஸி 2 ரன்களிலும், முகமது ஹபீஸ் 5 ரன்களிலும், விரித்தமன் சஹா 1 ரன்னும், லக்ஷ்மி சுக்லா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

 

ஷான் பொல்லாக்கின் அபாரப் பந்துவீச்சு காரணமாக கொல்கத்தா அணியில் ஓருவராலும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. கங்குலி 20 பந்துகளில் 15 ரன்களும், அஜித் அகர்கர் 14 பந்துகளில் 15 ரன்களும் எடுத்ததே அந்த அணியில் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

 

கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல் சரிய, அந்த அணி 15.2 ஓவர்களில் 67 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

 

சச்சின் தெண்டுல்கரின் தலைமையில் செயல்பட்ட மும்பை அணி இந்த ஆட்டத்திலும் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தியது. சச்சின் தெண்டுல்கர் எதிரணியின் 4 விக்கெட்டுகளை கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

 

மும்பை அணியின் ஷான் பொல்லாக் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிவைன் பிராவோ, ரோஹன் ரஜே, தோர்நெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இதையடுத்து ஆடிய மும்பை அணி 5.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தனது வெற்றி இலக்கான 68 ரன்களை எளிதாக எட்டியது.

 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூர்யாவும் மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கரும் களமிறங்கினர்.

 

சச்சின் தெண்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சனத் ஜெயசூர்யாவுடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார்.

 

ஆட்டத்தை அதிக நேரம் வளர்க்க விரும்பாத ஜெயசூர்யா கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சினை சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினார்.

 

ஜெயசூர்யா 17 பந்துகளில் 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் விளாச மும்பை அணி 5.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. உத்தப்பா 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

ஜெயசூர்யா 48 ரன்களுடனும், தோர்நெலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

ஜெயசூர்யாவின் அதிரடிக்கு, கொல்கத்தாவின் புயல்வேகப் பந்துவீச்சாளர்களான ஷோயப் அக்தரும், இஷாந்த் சர்மாவும் கூட தப்பவில்லை. அக்தர் 2 ஓவர்களில் 29 ரன்களும், இஷாந்த் சர்மா 2.3 ஓவர்களில் 29 ரன்களும் வாரி வழங்கினர்.

 

கொல்கத்தா அணி எடுத்த 67 ரன்களே இப்போட்டித் தொடரில் குறைந்தபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர் கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூர் அணி 82 ரன்கள் எடுத்திருந்ததே குறைந்தபட்ச ரன்களாக இருந்தது.

 

மும்பை அணியின் ஷான் பொல்லாக் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

 

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி அரை இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive