CricketArchive

1 ரன்னில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை
by CricketArchive


Scorecard:Mumbai Indians v Kings XI Punjab
Player:SE Marsh
Event:Indian Premier League 2007/08

DateLine: 21st May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி), 45-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: வான்கடே மைதானம். மும்பை.
தேதி: 21.05.2008. புதன் கிழமை.
மோதிய அணிகள்: பஞ்சாப் அணி - மும்பை அணி்
முடிவு: 1 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி்
ஆட்ட நாயகன்: ஷான் மார்ஷ

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 45 -வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மாலை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதின.

கடந்த போட்டியில் விளையாடிய பஞ்சாப் வீரரான ரமேஷ் பொவார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஸ்ரீவாத்சவா சேர்க்கப்பட்டார்.

அதே போல கடந்த போட்டியில் விளையாடிய மும்பை வீரர்களான தோர்நெலி, டிவைன் பிராவோ, தகாவாலே, ரோஹன் ரஜே ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக டிவைன் ஸ்மித், ஷான் பொல்லாக், சித்தார்த் சிட்னிஸ், விக்ராந்த் யெலிகடி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையா வென்ற மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் முதலில் எதிரணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மார்ஷும் ஜேம்ஸ் ஹோப்ஸும் களமிறங்கினர்.

தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஷான் பொல்லாக் பந்துவீச்சில் பீனல் ஷாவிடம் பிடி கொடுத்து ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஷான் மார்ஷுடன் லூக் பொமர்ஸ் பேச் ஜோடி சேர்ந்தார். இவர்களிருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை நான்கு புறமும் சிதறடித்தனர்.

மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இருவரும் குறைந்த பந்துகளில் அரை சதத்தைக் கடந்தனர்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷான் மார்ஷ் 51 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து லூக் பொமர்ஸ் பேக் உடன் பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். அவர் 7 ரன்கள் எடுத்திருந்த போது, தனது பேட் சரியில்லை என்று புதிய பேட்டை மாற்றினார். அதை மாற்றியவுடன் சித்தார்த் சிட்னிஸ் பந்துவீச்சில் டிவைன் ஸ்மித்திடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து வந்த மகிள ஜெயவர்த்தனே 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய லூக் பொமர்ஸ் பேக் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 79 ரன்களும் இர்பான் பதான் 9 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.

மும்பை அணி சார்பில் ஷான் பொல்லாக் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் மிக மோசமாகப் பந்துவீசினர். போலக் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ஓரு விக்கெட் வீழ்த்தினார். ஆஷிஷ் நெஹ்ரா 3 ஓவர்களில் 34 ரன்களும், யெலிகடி 4 ஓவர்களில் 43 ரன்களும், சித்தார்த் சிட்னிஸ் 4 ஓவர்களில் 40 ரன்களும், பெர்னாண்டோ 4 ஓவர்களில் 36 ரன்களும் வாரி வழங்கினர்.

இதையடுத்து 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தொடக்க ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூர்யாவும் மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கரும் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர். முதல் ஓவரை வீசிய ஸ்ரீசாந்த் 7 வைட்கள் உள்பட 10 ரன்களை வாரி வழங்கினார்.

இரண்டாவது ஓவரை வீசிய இர்பான் பதான் அந்த ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 21 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் ஜெயசூர்யா 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் விளாச, சச்சினுன் தன் பங்கிற்கு 1 பவுண்டரி விளாசினார்.

ஜெயசூர்யா 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஜெயசூர்யா ஆட்டமிழந்தபோது மும்பை அணி 2.4 ஓவர்களில் 36 ரன்கள் எடுத்திருந்தது.

இவரையடுத்து சச்சின் தெண்டுல்கருடன் டிவைன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இவரும் வந்த வேகத்தில் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரிகள் உள்பட 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து சச்சின் தெண்டுல்கருடன் அபிஷேக் நாயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவைத்தெடுத்தனர்.

குறிப்பாக அபிஷேக் நாயர் வி.ஆர்.வி.சிங் வீசிய 13-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசினார். அவர் 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் எடுத்திருந்தபோது பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஸ்ரீவாத்சவாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அபிஷேக் நாயர் ஆட்டமிழந்த போது மும்பை அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது.

இவரையடுத்து சச்சின் தெண்டுல்கருடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சச்சின் தெண்டுல்கர் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசி இப்போட்டித் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சச்சின் தெண்டுல்கர் 46 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் எடுத்து பரிதாபமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த போது மும்பை அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இன்னும் 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை. ஆனால் தெண்டுல்கர் ஆட்டமிழந்தவுடன் அந்த நிலை மாறியது. அவரையடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஷான் பொல்லாக் ரன் எடுக்காமலும், ராபின் உத்தப்பா 9 ரன்களும், பீனல் ஷா 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் அணியின் அபாரமான பீல்டிங்கால் கடைசி ஓவரில் ஆட்டம் பரபரப்பு நிலையை எட்டியது.

கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி இருந்தது. அந்த ஓவரை வி.ஆர்.வி. சிங் வீசினார்.

அவர் வீசிய முதல் பந்து நோபாலாக, அதை சிக்ஸருக்கு விரட்டினார் சித்தார்த் சிட்னிஸ். ப்ரீ ஹிட் மூலம் கிடத்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சிட்னிஸ். ஆக 1 பந்தில் 11 ரன்கள் எடுத்து மும்பை அணி.

அதுவரை கவலையாக இருந்த மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் 1 சிக்ஸர், 1 பவுண்டரி பறந்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்.

இன்னும் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மேலும் 1 ரன் சேர்த்த சிட்னிஸ் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆஷிஷ் நெஹ்ராவும் ரன் ஏதும் எடுக்காமலேயே ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி, 1 ரன் எடுத்தால் டை என்ற நிலை.

கடைசி பந்தை சந்தித்த விக்ராந்த் யெலிகடி பந்தை தூக்கி அடிக்காமால் தரையோடு அடிக்க, அது யுவராஜ்சிங் பக்கம் செல்ல, 1 ரன்னாவது எடுப்போம் என்று நினைத்த விக்ராந்த் யெலிகடி மறுமுனைக்கு வேகமாக ஓட, யுவராஜ்சிங் பாய்ந்து சென்று அவரை ரன் அவுட் செய்ய, பரபரப்பான ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கடைசி வரை போராடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் சேர்த்து 1 ரன்னில் தோற்றுப் போனது. சச்சின் தெண்டுல்கர் மும்பை அணிக்கு தலைமையேற்ற பிறகு அந்த அணி பெறும் முதல் தோல்வியாகும்.

கடைசி ஓவரில் மட்டும் 3 பேர் ரன் ஆவுட் முறையில் இட்டமிழந்தனர். மும்பை அணியில் 5 பேர் ரன் அவுட் ஆனது அந்த ஆணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சொந்த மண்ணில் மும்பை அணி தோற்றதால் மைதானத்தில் அமர்ந்திருந்த உள்ளூர் ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனைக் கண்ட யுவராஜ் நாங்களும் இந்திய அணியில் உள்ளவர்கள்தான். வேறுபடுத்தி பார்க்காதீர்கள் என்று காட்டமாகக் கூறினார்.

பஞ்சாப் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றதும் அந்த அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரித்தி ஜிந்தா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். அவரது அணி வீரர்களை ஓடிச்சென்று பாராட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் எடுத்து அரை இறுதிக்குத் தகுதி பெறுகின்ற வாய்ப்பை மிகவும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive