CricketArchive

அரையிறுதியை நழுவவிட்டது மும்பை அணி
by CricketArchive


Scorecard:Rajasthan Royals v Mumbai Indians
Player:Sohail Tanvir
Event:Indian Premier League 2007/08

DateLine: 27th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 53-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்.
தேதி: 26.05.2008. திங்கள் கிழமை.
மோதிய அணிகள்: ராஜஸ்தான் - மும்பை
முடிவு: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: சோஹைல் தன்வீர்

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 53-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் மோதின.

அரையிறுதிக்கு முன்னேற இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி களமிறங்கியது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற உற்சாகத்தில் இருந்த ராஜஸ்தான் அணி பூவா தலையா வென்றதும் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதனால் மும்பை அணி சார்பில் சனத் ஜெயசூர்யாவும் அந்த அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

சோஹைல் தன்வீர், ஷேன் வாட்சன் மிக துல்லியமாக பந்துவீச, மும்பை அணி துவக்கத்தில் திணறியது. ஆடுகளம் மிகவும் மந்தமாக இருக்க... சச்சினும், ஜெயசூர்யாவும் ஒரு நாள் போட்டி போல நிதானமாக விளையாடினர். 9 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள்தான் அந்த அணியால் எடுக்க முடிந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னே-சச்சின் மோதல் 10-வது ஓவரில் அரங்கேறியது. முதல் பந்தில் சச்சின் 2 ரன்கள் எடுத்தார். 3வது பந்தில் ஜெயசூர்யா ஒரு பவுண்டரி அடித்தார்.

இந்த நேரத்தில் பந்துவீச வந்த சித்தார்த் திரிவேதி அசத்தினார். முதலில் ஜெயசூர்யாவை 38 ரன்களுக்கு வெளியேற்றினார். வழக்கமாக வாணவேடிக்கை காட்டும் இவர் இம்முறை ஒரு சிக்சர் கூட அடிக்காதது ஆச்சரியமாக இருந்தது.

சிறிது நேரத்தில் சச்சினும் திரிவேதி பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க நிலைமை மோசமானது. இதனை தொடர்ந்து வந்தவர்கள் ஏனோ தானோ என விளையாடினர். ராபின் உத்தப்பா 3 ரன்களும், டிவைன் ஸ்மித் 8 ரன்களும் எடுத்த திருப்தியோடு விரைவாக வெளியேறினர்.

17வது ஓவரில் சோஹைல் தன்வீர் அற்புதமாக பந்துவீசி கலக்கினார். அபிஷேக் நாயரையும், ஷான் பொல்லாக்கையும் அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தினார். அடுத்து வந்த பாண்டே தடுத்து ஆட, சோஹைல் தன்வீருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு நழுவியது.

அபிஷேக் நாயர் 25 ரன்கள் எடுத்தும், ஷான் பொல்லாக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மும்பை அணி ஆட்ட நேர முடிவில் 125 ரன்களை தாண்டுவதே சந்தேகமாக இருந்த நிலையில் ஷேன் வாட்சன் வீசிய கடைசி ஓவரில் தகவாலே ஒரு சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி அடித்து கவுரவமான ஸ்கோரை பெற்று தந்தார்.

தகவாலே வெறும் 8 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சோஹைல் தன்வீர் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், சித்தார்த் திரிவேதி 4 ஓவர்கள் வீசி 31 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அந்த அணியின் கேப்டன் ஷேன் வார்னே 4 ஓவர்கள் வீசி 30 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல் அதிரடி துவக்கம் தந்தார். ஆசிஷ் நெஹ்ரா, ஷான் பொல்லாக் ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார். இவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

யூசுப் பதான் 2 ரன்களும், அஸ்னோட்கர் 17 ரன்களும் எடுத்திருந்த போது தில்ஹாரா பெர்னாண்டோ பந்துவீச்சில் வெளியேறினர்.

முகமது கைப் 12 ரன்களுடனும், ஷேன் வாட்சன் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

இதற்கு பின் ரவிந்திர ஜடேஜாவும், நிரஜ் படேலும் இணைந்து துணிச்சலாக போராடினர். இவர்களிருவரும் விவேகமாக விளையாடி அணியின் வெற்றிக்கு போராடினர்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரை தில்ஹாரா பெர்னாண்டோ வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் கொடுக்க, இரண்டாவது பந்தில் 3 ரன் கிடைத்தது. மூன்றாவது பந்தில் நிரஜ் படேல் ஒரு சூப்பர் சிக்சர் அடிக்க...ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 4 மற்றும் 5 வது பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்து ஒரு ‘வைடு’ வீசப்பட... உதிரியாக ஒரு ரன் கிடைத்தது.

இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. கடைசி பந்தை சந்தித்த நிரஜ் படேல் தரையோடு அடித்தார்... அந்த பந்தை பெர்னாண்டோ படுத்து தடுக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் ரன் அவுட் செய்ய முயன்ற ஜெயசூர்யா கையில் இருந்தும் பந்து நழுவியது. அதற்குள் தேவையான இரண்டு ரன்கள் ஓடி எடுக்கப்பட, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து ஆச்சர்ய வெற்றி பெற்றது.

நிரஜ் படேல் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 20 பந்துகளில் 1 சிக்ஸர் உள்பட 23 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மீண்டும் ஒரு முறை அசத்தலாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியின் சோஹைல் தன்வீர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

கடைசி பந்து வரை போராடி, பரிதாப தோல்வியை சந்தித்த மும்பையின் அரையிறுதி கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இட்டத்தில் மும்பை தோல்வியுற்றதால், தனது கடைசி தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெல்வதுடன், டெக்கான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி தோற்றால்தான் மும்பை அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இத்தோல்வியை தொடர்ந்து மும்பை அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு பெருத்த ‘அடி’ விழுந்துள்ளது.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive