CricketArchive

அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை அணி
by CricketArchive


Scorecard:Deccan Chargers v Chennai Super Kings
Player:SK Raina
Event:Indian Premier League 2007/08

DateLine: 29th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 54 -வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ராஜிவ்காந்தி சர்வதேச மைதானம். ஹைதராபாத்.
தேத: 27.05.2008. செவ்வாய்க் கிழமை.
மோதிய அணிகள: டெக்கான் அணி - சென்னை அணி
முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: சுரேஷ் ராய்னா

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 54 -வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு ஹைதராபாத்திலுள்ள ராஜிவ்காந்தி சர்வதேச

மைதானத்தில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் கடைசி இடத்தில் உள்ள டெக்கான் அணியும், நான்காவது இடத்தில் உள்ள சென்னை அணியும் மோதின. இப்போட்டியில் வென்றால்தான் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது. இப்போட்டி இரு அணிகளுக்கும் கடைசி தகுதிச் சுற்றுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

பூவா தலையா வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக ஆடம் கில்கிறிஸ்டும், ஹெர்சல் கிப்ஸும் களமிறங்கினர்.

 

சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் துவக்கத்திலேயே, தங்களது அபாரமான பந்துவீச்சால் எதிரணியை திணறடித்தனர். அதன் விளைவாக ஹெர்சல் கிப்ஸ் 8 ரன்கள் எடுத்தும், ஆடம் கில்கிறிஸ்ட் 5 ரன்கள் எடுத்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினர்.

 

இரண்டு நட்சத்திர வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்கவும், டெக்கான் அணியின் ரன் எடுக்கும வேகம் அப்படியே குறைந்து போனது.

 

இதற்கு பின் ஸ்காட் ஸ்டைரிஸும், வேணுகோபால் ராவும் பொறுப்பாக ஆடினர். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை தந்தனர். இந்த நேரத்தில் சுழல் மன்னன் முரளீதரன் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட ஸ்டைரிஸ், ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரது எண்ணிக்கை 20 ரன்கள் ஆகும். இப்படி முன்வரிசை ஆட்டக்காரர்கள் சரிய...டெக்கான் அணி 10.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து திணறியது.

 

பின்னர் ரவி தேஜாவும், வேணுகோபால் ராவும் இணைந்து அணியின் எண்ணிக்கையை அதிகரிக்க போராடினர். பாலாஜி வீசிய 14வது ஓவரில் வேணுகோபால் ராவ் ஒரு சிக்சர் அடித்தார். மகாய நிதினி வீசிய 18வது ஓவரில் ரவி தேஜா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

 

அல்பி மோர்கெல் வீசிய 19வது ஓவரில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் பந்தில் பவுண்டரி விட்டுக் கொடுத்த மோர்கெல் மூன்றாவது பந்தில் ரவி தேஜாவை வெளியேற்றினார். அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்திருந்தார்.

 

அடுத்த பந்தில் ஒரு ரன்னுக்காக வீணாக ஓடிய வேணுகோபால் ராவ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இவர் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் எடுத்தார்.

 

அடுத்து களமிறங்கிய யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஐந்தாவது பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய ஆர்.பி.சிங் 6வது பந்தில் இமாலய சிக்சர் ஒன்றை அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.

 

அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடியை கடைசியாக களமிறக்கியது தான் ஆச்சரியமாக இருந்தது. இவர் ஒரு ரன் எடுத்திருந்த போது பாலாஜி பந்து வீச்சில் வெளியேறினார்.

 

20 ஓவர்கள் முடிவில் டெக்கான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

 

சென்னை அணி சார்பில் அல்பி மோர்கெல், பாலாஜி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மகாய நிதினி, முத்தையா முரளீதரன், மன்பிரீத் கோனி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

 

இதையடுத்து 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது சென்னை அணி.

 

போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு எதிர்பார்த்தபடி துவக்கம் அமையவில்லை. ஸ்டீபென் பிளமிங் 14 ரன்கள் எடுத்து விரைவாக வெளியேறினார்.

 

இதற்கு பின் பார்திவ் படேலும், சுரேஷ் ராய்னாவும் இணைந்து பொறுப்பாக விளையாடினர்.

விஜய்குமார், சர்வேஷ் குமார் ஓவர்களில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார் சுரேஷ் ராய்னா.

 

இந்த நேரத்தில் பார்திவ் படேல் 20 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சுரேஷ் ராய்னாவுடன் ஜோடி சேர்ந்தார் சென்னை அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி.

 

தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார். சர்வேஷ் குமார் வீசிய பந்தில் அவரிடமே பந்தை திருப்பி அடிக்க... அந்த வாய்பை சர்வேஷ் குமார் தவறவிட, அது பவுண்டரியாக மாறியது.

 

கிடைத்த ‘வாழ்வை’ பயன்படுத்திக் கொண்ட தோனி அசத்தலாக பேட்டிங் செய்தார். இவருக்கு பக்க பலமாக ராய்னா இருக்க... அணியின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது.

 

பிரக்யான் ஓஜா வீசிய பந்தில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்தார் தோனி. மறுபக்கம் அப்ரிடி சுழலில் ராய்னா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். பிரக்யான் ஓஜா ஓவரில் மீண்டும் ஒரு முறை சிக்சர் அடிக்க பார்த்தார் தோனி. ஆனால் அந்த பந்து கிப்ஸ் கையில் சிக்க... 37 ரன்களுக்கு வெளியேறினார். அவரது கணக்கில் 1 சிக்ஸரும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

 

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. விஜய்குமார் பந்துவீசினார். முதல் பந்தில் மோர்கெல் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் சுரேஷ் ராய்னா ஒரு இமாலய சிக்சர் அடிக்க...சென்னை அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

அரைசதம் கடந்த சுரேஷ் ராய்னா 43 பந்துகளில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 54 ரன்களும், அல்பி மோர்கெல் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

சென்னை அணியின் வீரர் சுரேஷ் ராய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

வாழ்வா...சாவா போட்டியில் சாதித்துக் காட்டிய சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதால் 16 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது. மேலும் தரவரிசைப்பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive