CricketArchive

இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது?
by CricketArchive


Event:Indian Premier League 2007/08

DateLine: 30th May 2008

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று இரவு மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

இரவுப் போட்டியாக நடைபெற உள்ள இப்போட்டியில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ராஜஸ்தான் அணியும், 4வது இடத்தைப் பிடித்துள்ள டெல்லி அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

 

இரு அணிகளும் இதற்கு முன்னர் நேருக்கு நேர் விளையாடிய இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களில் தலா ஓரு வெற்றியைப் பெற்றுள்ளன.

 

ராஜஸ்தான் அணி இதுவரை மோதிய 14 தகுதிச் சுற்று ஆட்டங்களில் 11 வெற்றியைப் பெற்று தன்னம்பிக்கை மிகுந்த அணியாகத் திகழ்கிறது.

 

கிரேம் ஸ்மித், ஸ்வப்னில் அஸ்நோத்கர், யூசுப் பதான், நீரஜ் படேல், ஷேன் வாட்சன் ஆகியோர் இதுவரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மலும் சேர்ந்துள்ளார்.

 

கிரேம் ஸ்மித் இத்தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடி 416 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். இவருக்கடுத்து ஷேன் வாட்சன் 13 ஆட்டங்களில் விளையாடி 392 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். யூசுப் பதான் 14 ஆட்டங்களில் விளையாடி 334 ரன்கள் குவித்துள்ளார். இந்த அணியின் இளம் துவக்க வீரர் ஸ்வப்னில் அஸ்நோத்கர் 7 ஆட்டங்களில் விளையாடி 244 ரன்கள் குவித்துள்ளார். இப்படி பேட்டிங் வரிசையை பலமாக வைத்துள்ளது ராஜஸ்தான் அணி.

 

பந்துவீச்சில் சோஹைல் தன்வீர் 10 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளார். டெல்லியும், ராஜஸ்தானும் இதற்கு முன்னர் விளையாடிய 2 தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் தன்வீர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

இந்நிலையில், சோஹைல் தன்வீரை கௌதம் காம்பீரும், வீரேந்திர ஷேவாக்கும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது இன்று நடைபெற உள்ள போட்டியில் தெரிந்து விடும்.

 

வேகப்பந்து வீச்சில் சோஹைல் தன்வீருடன், ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், முனாப் படேல் ஆகியேர் கைகொடுக்க, சுழற்பந்துவீச்சில் அந்த அணியின் கேப்டன் ஷேன் வார்னேவும், யூசுப் பதானும் பார்த்துக் கொள்ள ராஜஸ்தான் அணி பந்துவீச்சிலும் வலுவான அணியாகவே காட்சியளிக்கிறது.

 

இத்தொடரில் மிகவும் குறைவான விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அணி, ராஜஸ்தான் அணி என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அணியின் பயிற்சியாளரும், கேப்டனும் ஷேன் வார்னேதான் என்பதால் வியூகங்கள் அமைப்பதிலும், அணியை திறம்பட வழி நடத்திச் செல்வதிலும் பிரச்சினை ஏதும் இருக்காது என்பது உற்று நோக்க வேண்டிய விஷயம் ஆகும்.

 

டெல்லி அணி இதுவரை மோதிய 14 தகுதிச் சுற்று ஆட்டங்களில் 7 வெற்றியைப் பெற்றும், கொல்கத்தாவுடன் ஆட இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட, அதன் மூலம் கிடைத்த ஒரு புள்ளியைப் பெற்றும் நான்காமிடத்தைப் பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

 

இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கௌதம் காம்பீரும், வீரேந்திர ஷேவாக்கும் அற்புதமாக விளையாடி வருகின்றனர். 3-வதாக களமிறங்கும் ஷீகர் தவானும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

 

ஆனால், அவர்களுக்குப் பின்னர் விளையாடிய பேட்ஸ்மேன்கள் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே டெல்லி அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.

 

கௌதம் காம்பீர் இத்தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடி 523 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 அரை சதங்கள் அடங்கும். இவருக்கடுத்து வீரேந்திர ஷேவாக் 13 ஆட்டங்களில் விளையாடி 403 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். ஷீகர் தவான் 13 ஆட்டங்களில் விளையாடி 335 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும்.

 

இந்த அணியில் உள்ள டி வில்லியர்ஸ், தில்ஷான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இப்போட்டியில் வெகுண்டெழுந்தால் பேட்டிங் வரிசையை பலப்படுத்தி விடலாம்.

 

பந்து வீச்சைப் பொறுத்த வரை இந்த அணிக்கு கவலையில்லை. வேகப்பந்து வேதாளம் என்று சொல்லப்பட்ட கிளென் மெக்ரத் முதன்மை பந்து வீச்சாளராகத் திகழ்கிறார். இவர், இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், எதிரணியினரின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதில் வல்லவர். இவருக்கு பக்க பலமாக பெர்வீஸ் மஹரூப், யோமகேஷ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் வலு சேர்க்கின்றனர். அமித் மிஸ்ராவும், ஷேவாக்கும் சுழற் பந்துவீச்சில் தேவைப்படும் நேரங்களில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர்கள்.

 

எப்படி பார்த்தாலும் ராஜஸ்தான் அணிக்கு சவால் அளிக்கக்கூடிய அணியாகவே டெல்லி அணி இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

 

அணிகள் விவரம்

 

ராஜஸ்தான்: ஷேன் வார்னே (கேப்டன்), கிரேம் ஸ்மித், ஸ்வப்னில் அஸ்நோத்கர், கம்ரன் அக்மல் (விக்கெட் கீப்பர்), யூசுப் பதான், முகமது கைப், ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, நீரஜ் படேல், சோஹைல் தன்வீர், சித்தார்த் திரிவேதி, பங்கஜ் சிங், முனாப் படேல், மகேஷ் ராவத், தினேஷ் சலுங்கே, மோர்ன் மோர்கெல், தருவர் கோஹ்லி.

 

டெல்லி: வீரேந்திர ஷேவாக் (கேப்டன்), கௌதம் காம்பீர், ஷீகர் தவான், ரஜத் பாடியா, டி வில்லியர்ஸ், திலகரத்ன தில்ஷான், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பிரெட் ஜீவ்ஸ், கிளென் மெக்ரத், பெர்வீஸ் மஹரூப், யோமகேஷ், மிதுன் மானஸ், அமித் மிஸ்ரா, பிரதீப் சங்வான், மயங்க் டெலான், மனோஜ் திவாரி.

 

வான்கடே மைதானம் யாருக்கு சாதகம்?

 

இந்த 20 ஓவர் போட்டிகளுக்காக நடைபெற உள்ள, இரண்டு அரை இறுதி ஆட்டங்களும் மும்பை வான்கடே மைதானத்தில்தான் நடைபெற இருக்கிறது. இதுவரை, இந்த மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டங்களில் மிதவேகப் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்திலும் மிதவேகப் பந்துவீச்சாளர்களுக்கு அனுகூலமாகவே மைதானம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த மைதானத்தில் பூவா, தலையா வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதே தற்போதைய வழக்கமாக உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் பூவா, தலையா முக்கிய பங்கு வகிக்கும்.

 

கடந்த சில நாள்களில் மும்பையில் மழை பெய்யவில்லை. இருப்பினும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வீரர்களுக்கு அசௌகரியமாக இருப்பதுடன் மழை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரை இறுதி வரை மும்பையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

இரவு 8 மணிக்கு துவங்கும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் வெல்லப் போவது ராஜஸ்தானா? டெல்லியா..? தெரிந்து கொள்ள காத்திருப்போம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive