CricketArchive

மஹேந்திரசிங் தோனி
by CricketArchive


Player:MS Dhoni

DateLine: 21st June 2008

 

முழுப்பெயர்: மஹேந்திரசிங் தோனி

 

பிறப்பு: 7 ஜூலை 1981. ராஞ்சி, பீகார் (தற்போது ஜார்க்கண்ட்) இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: விக்கெட் கீப்பர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசிய கிரிக்கெட் லெவன், பீகார், ஜார்கண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ்

 

அறிமுகம்:-
டெஸ்ட் போட்டி: டிசம்பர் 2-6, 2005, இந்தியா - இலங்கை இடையே சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: டிசம்பர் 23, 2005 அன்று இந்தியா - வங்கதேசம் இடையே சிட்டாகாங்கில் நடைபெற்ற ஒருதினப் போட்டி.
20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.

 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர். அதிரடி ஆட்டக்காரர். இளம் வயதில், அணிக்கு வந்த இரண்டு ஆண்டிற்குள் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவர் மஹேந்திரசிங் தோனி. இவர் தனது 23-வது வயதில் இலங்கை அணிக்கு எதிராக 2005-ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

 

தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தவர். இவர் பிறந்த இடமும், வளர்ந்த இடமும் மலைப்பாங்கான பிரதேசமாகும். இவர் ராஞ்சியிலுள்ள டி.ஏ.வி. வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது, பள்ளியின் கால்பந்து அணியில் கோல்கீப்பராக விளையாடினார். கால்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். இவரது கால்பந்துப் பயிற்சியாளர் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுப்பினார். அதில் விக்கெட் கீப்பராக விளையாடுவது தோனிக்கு பிடித்துப் போய்விடவே, அவர் கிரிக்கெட் பாதைக்கு திரும்ப ஆரம்பித்தார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்திலிருந்து கிரிக்கெட்டிற்குள் முழுமையாக நுழைந்தார். சச்சின் தெண்டுல்கரும், ஆடம் கில்கிறிஸ்டும் இவருக்குப் பிடித்த வீரர்கள் ஆவர்.

 

இவர் 1999-2000 வது ஆண்டிலிருந்தே முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். 2004-ல் தான் தேசிய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. இந்திய ஏ அணிக்காக இவர் விளையாடிய போது பாகிஸ்தானுக்கு எதிராக இவர் அடித்த இரண்டு சதங்களும், கென்யாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இவரது ஆட்டமும் எதிரணி பந்துவீச்சாளர்களை மிரளச் செய்தன. இப்போட்டிகளில், தான் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார்.

 

இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், அதிரடி ஆட்டக்காரராகவும் நுழைந்தவர்.இவர் அணிக்குள் நுழைந்தபோது இவரது தலைமுடி, பிடறியைத் தாண்டி நீளமாக இருக்கும். இது ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் 148 ரன்கள் குவித்தார். (இது அவரது 5 -வது ஒருதினப் போட்டி) இந்த போட்டியில் வீரேந்திர ஷேவாக்கின் மற்றொரு பிரதி என்று சொல்லும் அளவிற்கு இவரது ஆட்டம் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் 183 ரன்கள் குவித்து அசத்தினார். ஒரு தினப் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை இதன் மூலம் முறியடித்தார்.

 

டெஸ்ட் போட்டிகளிலும் இவர் தன் திறமையை வெளிப்படுத்தினார். பைசலாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 148 ரன்கள் எடுத்தார். இந்த போட்டி அவர் கலந்து கொண்ட 5 வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

2007-ல் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணியின் (ஒரு தினப் போட்டிகளின்) துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது திறமையான வழிநடத்துதலால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

 

2007, செப்டம்பரில் ராகுல் திராவிட் கேப்டன் பதவியிலிருந்து விலகியதால், இவரே இந்திய அணியின் ஒரு தினப் போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

இவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை அணிக்காக ரூ. 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்தொடரில் அதிக அளவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீரர் இவர்தான். சென்னை அணியின் கேப்டனாக தலைமையேற்று இறுதிப்போட்டி வரை வழிநடத்திச் சென்றார்.

 

அண்மையில் வங்கதேசத்தில் நடைபெற்ற கிட்பிளை முத்தரப்பு ஒருநாள் தொடரிலும், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை -2008 ஒருதினத் தொடரிலும் இவரது தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த டெஸ்ட் அணியில் ஓய்வு எடுக்க வேண்டி, தானாக முன்வந்து விலகிக் கொண்டார். இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோற்றது.

 

இந்திய ஒருதின அணிக்கு தலைமையேற்று , இலங்கை அணிக்கெதிரான தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று காட்டினார். மேலும் இத்தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, இவரது தலைமையிலான இளம் இந்திய அணி சாதனை படைத்தது. கடைசியாக முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, கடந்த 1998ல் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றிருந்தது.

 

இவர் திறமை வாய்ந்த இளம் வீரர் என்பது மட்டுமல்ல, நெருக்கடியான தருணங்களில் பதற்றப்படாமல் சரியான முடிவுகளை எடுப்பதில் வல்லவர். அனைத்து வீரர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்புடையவர் மஹேந்திர சிங் தோனி.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive