Scorecard: | Pakistan v India |
Player: | SK Raina |
Event: | Asia Cup 2008 |
DateLine: 27th June 2008
போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 26.06.2008. வியாழக்கிழமை.
மோதிய அணிகள்: பாகிஸ்தான் அணி - இந்திய அணி
முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரெய்னா
 
வணக்கம் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் பி பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது இந்திய அணி.
 
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ராபின் உத்தப்பா, மன்பிரீத் கோனி ஆகியோருக்கு பதிலாக யுவராஜ்சிங்கும், இஷாந்த் சர்மாவும் சேர்க்கப்பட்டனர். 
இன்று பி பிரிவில் நடந்த கடைசி தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டது. பூவா தலையா வென்ற பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 
பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்களாக சல்மான் பட்டும், சோயிப் மாலிக்கும் களமிறங்கினர். துவக்கத்தில் மந்தமாக விளையாடிய இந்த ஜோடி மெல்ல அதிரடிக்கு மாறியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 90 ரன்கள் எடுத்திருந்த போது சல்மான் பட் ஆட்டமிழந்தார். இவர் 64 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 
அடுத்து வந்த யூனிஸ் கான், சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தது. அசத்தலாக விளையாடிய சோயிப் மாலிக் ஒரு நாள் அரங்கில் தனது 6-வது சதத்தை பதிவு செய்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். 
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்த போது சோயிப் மாலிக் காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இவர் 119 பந்துகளில் ஒரு சிக்சர், 16 பவுண்டரிகள் உள்பட 125 ரன்கள் எடுத்தார். 
மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த யூனிஸ் கான் அரைசதம் கடந்த நிலையில் யூசுப் பதான் பந்துவீச்சில் சுரேஷ் ரெய்னாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். இவர் 60 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 59 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் முகமது யூசுப், மிஸ்பா உல்ஹக் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி, அணிக்கு ரன்கள் சேர்த்தனர். முகமது யூசுப் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாகித் அப்ரிடி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து, உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றினார். 
மிஸ்பா உல்ஹக் 31 ரன்களுடனும், சோஹைல் தன்வீர் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. 
பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு இளம்பெண்கள் மைதானத்திலிருந்தபடியே உற்சாகப்படுத்தினர். 
இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு கௌதம் காம்பிர் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரையடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, வீரேந்திர ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி அணியின் ரன்வேகம் குறையாமல் பார்த்து கொண்டது. அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 40 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட தனது 4-வது அரைசதத்தைக் கடந்தார். 
இவரை தொடர்ந்து சேவக்கும் அரைசதத்தைக் கடந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 148 பந்துகளில் 198 ரன்கள் எடுத்திருந்தபோது சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 69 பந்துகளில் 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் எடுத்தார். 
மறுமுனையில் வீரேந்திர ஷேவாக் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இவர் ஒரு நாள் அரங்கில் 9வது சதத்தை பதிவு செய்தார். இவர் 95 பந்துகளில் 5 சிக்சர்கள், 12 பவுண்டரிகளின் உதவியுடன் 119 ரன்கள் எடுத்து, ஆட்டமிழந்தார். 
அடுத்து வந்த கேப்டன் தோனி, துணைக் கேப்டன் யுவராஜ்சிங்குடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி விரைவாக கொண்டு சென்றது. சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 2 ரன்களில் அரைசதம் கடக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 
தோனி 26 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்ததால், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடம் பிடித்தது. 
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். 
நன்றி, வணக்கம்.