CricketArchive

'சூப்பர் 4'-ல் பாகிஸ்தானை சுருட்டிய இலங்கை!
by CricketArchive


Scorecard:Pakistan v Sri Lanka
Player:KC Sangakkara
Event:Asia Cup 2008

DateLine: 1st July 2008

 

போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி :29.06.2008. ஞாயிற்றுக்கிழமை.
மோதிய அணிகள்: இலங்கை அணி - பாகிஸ்தான் அணி
முடிவு: 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: குமார் சங்ககாரா

 

வணக்கம்

 

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று கராச்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி பிரகாசப்படுத்திக் கொண்டது.

 

பூவா தலையா வென்ற பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

 

சனத் ஜெயசூர்யாவும், குமார் சங்ககாராவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆனால் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் வேகத்தில் ஜெயசூர்யா 8 ரன்களிலும், கேப்டன் மஹேல ஜெயவர்தனே 29 ரன்களிலும் வெளியேறினார்.

 

இதற்கு பின் சங்ககாராவும், கபுகேதராவும் இணைந்து கலக்கலாக ஆடினர். கபுகேதரா 58 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமரசில்வா சங்ககாராவுடன் இணைந்து அபாரமாக ஆடினார். இவர் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சங்ககாரா ஒரு நாள் அரங்கில் தனது 9வது சதத்தைக் கடந்தார். இவர் 96 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 100 ரன்களைக் கடந்தார்.

 

சதமடித்ததும் மேலும் 12 ரன்கள் சேர்த்த நிலையில் இவர் 112 ரன்களுக்கு சோஹைல் தன்வீர் பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மிராண்டோ 28 ரன்கள் விளாசினார். இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு 23 ரன்கள் உபரியாகவும் கிடைத்தது. பாகிஸ்தான் சார்பில் சோஹைல் தன்வீர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. சமிந்தா வாஸ் வீசிய முதல் பந்தில் சல்மான் பட் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார்.

 

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் படுநிதானமாக ஆடினர். சல்மான் பட் ஆட்டமிழந்ததும் சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்த யூனிஸ் கான் 60 பந்துகளில் 47 ரன்களும், சோயிப் மாலிக் 79 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாகித் அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமலேயே ஜெயசூர்யா சுழலில் சிக்கியது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது. தனி மனிதனாக போராடிய மிஸ்பாஉல்ஹக் 76 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

 

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

 

இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

ஆட்டநாயகன் விருதை குமார் சங்ககாரா தட்டிச் சென்றார்.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive