CricketArchive

யூனிஸ்கான் அதிரடியால் பாகிஸ்தான் வெற்றி
by CricketArchive


Scorecard:Pakistan v India
Event:Asia Cup 2008

DateLine: 4th July 2008

 

போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 02.07.2008. புதன்கிழமை.
மோதிய அணிகள்: இந்திய அணி - பாகிஸ்தான் அணி
முடிவு: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: யூனிஸ்கான்

 

வணக்கம்

 

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கராச்சியில் நடந்த ‘சூப்பர்-4’ சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இது பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான போட்டியாகும். இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள கட்டாய வெற்றியை எதிர் நோக்கி களமிறங்கியது.

 

சோயிப் மாலிக் உடல் தகுதியில் தேறாததால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை மிஸ்பா உல் ஹக் ஏற்றார். அறிமுக வீரராக சுழற்பந்துவீச்சாளர் சயித் அஜ்மல் வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ராபின் உத்தப்பா, ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, மன்பிரீத் கோனி ஆகியோர் நீக்கப்பட்டு, வீரேந்திர ஷேவாக், இர்பான் பதான், பியுஸ் சாவ்லா, பிரவீண் குமார் ஆகியோர் இடம் பெற்றனர்.

 

பூவா தலையா வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

 

வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பிர் இணைந்து இந்திய அணிக்கு அதிரடி துவக்கம் தந்தனர். சோஹைல் தன்வீர் வீசிய முதல் ஓவரிலேயே கௌதம் காம்பிர் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இவரது அடுத்த ஓவரில் வீரேந்திர ஷேவாக் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சை அடித்து நொறுக்க அணியின் எண்ணிக்கை வேகமாக ஏறியது.

 

கௌதம் காம்பிர் 35 ரன்களுக்கு வெளியேறினார். சிறிது நேரத்தில் வீரேந்திர ஷேவாக் 49 ரன்களுக்கு அப்துல் ராப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னாவும் இதே ஓவரில் சுரேஷ் ரெய்னாவும் 1 ரன்னில் வெளியேற, இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்து திணறியது.

 

அடுத்து வந்த யுவராஜ்சிங் 37 ரன்களில் வெளியேறினார். இதற்கு பின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, ரோஹித் சர்மா இருவரும் இணைந்து பொறுப்பாக ஆடினர். ரோஹித் சர்மா 58 ரன்கள் எடுத்தார். மிகவும் நிதானமாக ஆடிய தோனி 96 பந்துகளில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் ரன் ஏதும் எடுக்காமல் சயித் அஜ்மல் சுழலில், அவருடைய முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். அண்ணன் யூசுப் பதான் ஏமாற்றிய போதும், தம்பி இர்பான் பதான் கலக்கினார். அதிரடியாக விளையாடிய இவர் அணி 300 ரன்களை கடக்க உதவினார்.

 

இர்பான் பதான் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது.

 

கடின இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட்டும், நசிர் ஜாம்ஷெட்டும் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். சல்மான்பட் 36 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

ஜாம்ஷெட் 53 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் பெவிலியன் திரும்பினார். இவரையடுத்து வந்த முகமது யூசுப் 21 ரன்களில் விரைவாக வெளியேறினார்.

 

பின்னர் யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் இணைந்து கலக்கினர். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினர். பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, இர்பான் பதான் உள்ளிட்ட வேகங்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. பியுஸ் சாவ்லாவின் சுழலும் எடுபடவில்லை. இவர்களை வெளியேற்ற கேப்டன் தோனி மேற்கொண்ட முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. அபாரமாக ஆடிய யூனிஸ் கான் சதம் கடந்தார். மறுபக்கம் கலக்கிய தற்காலிக கேப்டன் மிஸ்பா உல் ஹக் அரைசதம் கடந்தார். பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.

 

யூனிஸ் கான் 117 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 123 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார் மிஸ்பா. ஆட்ட நாயகன் விருதை யூனிஸ் கான் பெற்றார்.

 

இப்போட்டியில் யுவராஜ்சிங் 4 ரன்களை கடந்தபோது, ஒருதினப் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக சச்சின் தெண்டுல்கர், ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன் ஆகியோர் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் ஆவர்.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive