Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 28th July 2008
வணக்கம்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் புதிய வரவான அஜந்தா மெண்டிஸ், சுழற்பந்து பூதம் முரளிதரன் கூட்டணியில் இந்தியா படுதோல்வியைத் தழுவியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31-ம் தேதி காலேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் விளையாடவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர்கள் அனைவரும் மைதானத்திற்குள் வருவமதும் போவதுமாகவே இருந்தனர். பந்து வீச்சையும் சொல்லவே வேண்டாம். நான்கு இலங்கை வீரர்கள் சதமடித்தனர் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்திய அணியின் துவக்க வீரர் ஷேவாக், இது டெஸ்ட் போட்டி என்பதை மறந்து 20 ஓவர் போட்டி போல் அதிரடியாக ஆட முற்பட்டு முதல் விக்கெட்டாக வீழ்ந்துபோனார். காம்பீர் அவரது திறனுக்கு ஏற்றவாறு முயற்சித்தார் முடியவில்லை.
சரி துவக்கம்தான் இப்படி அனுபவ வீரர்கள் உள்ளனரே என்று ஆறுதலடையலாமென்றால். அதற்கும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர், கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 172 ரன்கள் குவித்து சாதனை படைப்பார் எனக் எதிர்பார்திருந்த இந்திய ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கினார். அவர் இரு இன்னிங்ஸிலும் முறையே 27,12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் மூதத வீரரான சௌவுரவ் கங்குலி, இரு இன்னிங்ஸிலும் முறையே 23,4 ரன்களும், இந்திய அணியின் தூண் என்று வருணிக்கப்படும் ராகுல் திராவிட், இரு இன்னிங்ஸிலும் முறையே 14,10 ரன்களும் எடுத்து ஏமாற்றமளித்தனர்.
வி.வி.எஸ். லட்சுமண் மட்டுமே ஆறுதலாக இருக்க ஒர் அரை சதம் அடித்தார் அவ்வளவே. தோனி ஓய்விலிருக்க அவருக்கு பதிலாக அணியில் (நீண்ட நாட்களுக்குப் பிறகு) இடம் பிடித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் டெஸ்டில், கீப்பிங்கின் போது செய்த தவறுகள், பேட்டிங்கில் செய்த தவறுகள் என ஒன்று சேர்ந்து அவரை அணியில் இனு இடம்பிடிக்காத வண்ணம் செய்து விடும் போல் இருக்கிறது.
முன்வரிசையே ஆட்டம் கண்டபோது, பின்வரிசை நிமிர்ந்தா நிற்கும்... எல்லோரையும் நான்காவது நாளிலேயே சுருட்டியாயிற்று. இனி அதைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை. இனு இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டால் ஒழிய அடுத்து வரும் போட்டிகளில் வெல்வது கடினமாகிவிடும்.
பந்துவீச்சில் இந்திய அணி படு மோசம். இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ளேவின் சுழற்பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக அமையும். ஆனால் முதல் டெஸ்டில் கும்ளே 120 ரன்களை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டெஸ்ட் அரங்கில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தாமல் இருப்பது கும்ளேவுக்கு இது ஐந்தாவது முறை. ஐந்தில் நான்கு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, ஹர்பஜன்சிங் பந்து வீச்சு சுமார் ரகம்தான்.
இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசைக்கு வர்ணபுரா, சங்ககாரா, ஜெயவர்தனே, தில்ஷான் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு வாஸ், குலசேகரா...சுழல் பந்திற்கு முரளிதரனும், மெண்டிசும் உள்ளனர். தாயக மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்குகிறார்கள்.
தங்களது மாயாஜால சுழற்பந்துவீச்சில், இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தது இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி. முதல் டெஸ்டில் இவர்கள் 20 க்கு 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
இவர்களை இந்திய அணியினர் சமாளிக்க வேண்டும். அதிக ரன்களை குவிக்க வேண்டும். இந்தியப் புலிகள் எழுச்சி பெறுமா.. இலங்கை சிங்கங்களிடம் வீழுமா... இரண்டாம் டெஸ்டின் இறுதியில் அதற்கு விடை காண்போம் முதல் டெஸ்டின் போது அறிமுகப்படுத்தப்பட நடுவர் தீர்ப்பு (நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை) இந்திய அணிக்கு பாதகமாகவே முடிந்தன. ஆனால், இலங்கை அணிக்கு சாதகமாகவே முடிந்தன. இதனை பற்றி ஒரே ஆட்டத்தில் விமர்சனம் செய்ய முடியாது என்பதால் இத்தொடர் முடிந்ததும் அதைப்பற்றி ஒரு முடிவு கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.
இந்தியாவும் இலங்கையும் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டியிலும், இலங்கை 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இந்தியாவில் 14 டெஸ்ட் போட்டிகள் இலங்கைக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 8-ல் வென்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இலங்கையில், இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற 13 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச எண்ணிக்கை, 1986, கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. மிகக் குறைவான எண்ணிக்கை 2005, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 167 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச எண்ணிக்கை, 1997, கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 952 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மிகக் குறைவான எண்ணிக்கை 1990, சண்டிகாரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 82 ரன்களில் ஆட்டமிழந்தது.
இலங்கைக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1352 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ரன்கள் அடித்துள்ளார். அனில் கும்ப்ளே 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக அரவிந்த டிசில்வா 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1252 ரன்கள் குவித்துள்ளார். இதில் இதில் 5 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில், முரளிதரன் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் முகமது அசாருதீன் டிசம்பர் 17, 2006-ல், கான்பூரில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக, 199 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, 2, ஆகஸ்டு 1997-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 340 ரன்கள் குவித்தார்.
இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 27, டிசம்பர் 1986-ல், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் 51 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.
இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 29, ஆகஸ்டு 2001-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 87 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.
இரண்டாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கலாம். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக பார்தீவ் படேல் களமிறக்கப்படலாம். பிரக்யான் ஓஜா சேர்க்கப்படலாம். இலங்கை அணியில் மாற்றமிருக்காது.
இந்திய அணி: அனில் கும்ப்ளே (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், சௌவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்திர ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், கௌதம் காம்பிர், ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, முனாப் படேல். ஆர்.பி.சிங்.
இலங்கை அணி: வான்டார்ட், வர்ணபுரா, குமார் சங்ககாரா, மஹேல ஜெயவர்தனே (கேப்டன்), திலன் சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்ஷன், பிரசன்னா ஜெயவர்தனா (விக்கெட் கீப்பர்), சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, நுõவன் குலசேகரா, சமரா கபுகேதரா.
காத்திருக்கும் சாதனைகள்
டெஸ்ட் அரங்கில் 11,953 ரன்களுடன் அதிக ரன் எடுத்த வீரர் என்ற மேற்கிந்தித் தீவுகள் அணி வீரர் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு, இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு இன்னும் 133 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது, இப்பட்டியலில் சச்சின் 11,821 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். (இப்போட்டியிலாவது அவர் சாதிப்பார் என நம்புவோம்.)
இலங்கை சுழற்பந்து பூதம் முத்தையா முரளிதரன் 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 746 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 750 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழத்தியவர்கள் வரிசையில் இவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
LATEST SCORES
CURRENT EVENTS
- Bangladesh in Pakistan 2025
- Bangladesh in United Arab Emirates 2025
- Bulgaria Women in Estonia 2025
- Cook Islands in Japan 2025
- Germany Women in Greece 2025
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Women's T20 World Cup Asia Qualifier 2025
- ICC World Test Championship 2023 to 2025
- Japan International Twenty20 Tri-Series 2025
- Sri Lanka Women's Tri-Series 2024/25
- West Indies in Ireland and England 2025
- West Indies Women in England 2025
- Zimbabwe in England 2025
View all Current Events CLICK HERE
