CricketArchive

3வது டெஸ்ட்: முதல் நாள் இலங்கை 14/1
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 8th August 2008

 

வணக்கம்.

 

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸை 249 ரன்களுக்குள் இழந்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

 

இந்த அரு அணிகளுக்கும் இடையே, கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று காலை 10.15 மணிக்கு துவங்கியது.

 

இரு அணிகள் சார்பிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக பார்திவ் படேல் சேர்க்கப்பட்டார். அதே போல் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் குலசேகரா நீக்கப்பட்டு, இவருக்கு பதிலாக தம்மிக பிரசாத் சேர்க்கப்பட்டார். தம்மிக பிரசாத் சர்வதேச போட்டிகளில், முதன் முதலாக இப்போட்டியில்தான் அறிமுகமாகிறார்.

 

பூவா... தலையா... வென்ற இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

 

அதன்படி, இந்திய அணியின் துவக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக்கும், கௌதம் காம்பீரும் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் அதிரடியாக ஆடினார். கௌதம் காம்பீர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

 

ஒருதினப்போட்டிபோல் ஆடிய ஷேவாக் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 21 ரன்கள் எடுத்திருந்தபோது அறிமுக வீரர் தம்மிக பிரசாத் பந்துவீச்சில் ஜெயவர்தனேவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். தம்மிக பிரசாத் சர்வதேச அளவில் வீழ்த்தும் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக, ஷேவாக் 14 ரன்கள் எடுத்திருந்தபோது சமிந்தா வாஸ் வீசிய பந்தை திருப்பி அடிக்க, அந்த பந்தை பிடிக்க முயன்ற வர்ணபுரா அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

 

இதையடுத்து காம்பீருடன், ராகுல் திராவிட் ஜோடி சேர்ந்தார். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடாத திராவிட் இப்போட்டியிலும் ஏமாற்றமளித்தார். இவர் 10 ரன்கள் எடுத்திருந்த போது தம்மிக பிரசாத் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த சச்சின் தெண்டுல்கரும் 6 ரன்களில், தம்மிக பிரசாத் பந்து வீச்சில், இதே முறையில் ஆட்டமிழந்தார்.

 

இப்போட்டியிலாவது டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களை, சச்சின் தெண்டுல்கர் 6 ரன்களில் ஆட்டமிழந்து இம்முறையும் ஏமாற்றமளித்தார்.

 

இது அணியின் மூத்த வீரர்கள் பார்மில் இல்லாததைக் காட்டுகிறது. முதல் மூன்று விக்கெட்டுகளும் அறிமுக வீரர் தம்மிக பிரசாத் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரையடுத்து காம்பீருடன், சௌவுரவ் கங்குலி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழந்தாலும் சிறப்பாக ஆடிய காம்பீர் 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

 

உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. காம்பீர் 57 ரன்களுடனும், சௌவுரவ் கங்குலி 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

உணவு இடைவேளைக்குப் பிறகு நிதானமாக ஆடிய கங்குலி முரளிதரன் பந்தில் ஒரு சிக்ஸர் விளாசினார். இவர் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்திருந்தபோது முரளிதரன் சுழலில் வீழ்ந்தார்.

 

இப்படி மீண்டும் ஒருமுறை மூத்த வீரர்கள், சொற்பரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, எரிச்சலை ஏற்படுத்தினர். சிறப்பாக ஆடிவந்த காம்பீர் 72 ரன்கள் எடுத்திருந்தபோது அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார்.

 

இவரையடுத்து வி.வி.எஸ். லட்சுமணும், பார்தீவ் படேலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையாக ஆட முயற்சித்தனர். ஆனால் அஜந்தா மெண்டிஸின் சுழற்பந்து வீச்சின் முன் அவர்களது பேட்டிங் எடுபடவில்லை. லட்சுமண் 23 ரன்களிலும், பார்திவ் படேல் 13 ரன்களிலும், அடுத்து வந்த அனில் கும்ளே ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் மூவரையும் அஜந்தா மெண்டிஸ் வீழ்த்தினார்.

 

ஹர்பஜன் சிங் 3 ரன்கள் எடுத்திருந்தபோது முரளிதரன் சுழலில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஜாகீர்கானும், இஷாந்த் சர்மாவும் இணைந்து சிறப்பாக விளையாடினர். 9 விக்கெட்டுகளுக்கு 198 ரன்களை எடுத்த இந்தியா, கடைசி விக்கெட்டின் உதவியால் 249 ரன்களை எட்டியது.

 

ஜாகீர்கான் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் எடுத்திருந்தபோது மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார். இஷாந்த் சர்மா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

அஜந்தா மெண்டிஸ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் அறிமுக வீரரான தம்மிக பிரசாத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முரளிதரன், 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு வர்ணபுரா, வாண்டர்ட் சிறப்பான துவக்கம் அளிக்க முனைந்தனர். ஆனால் இஷாந்த் சர்மாவின் சிறப்பான பந்து வீச்சால் வர்ணபுரா 8 ரன்களில் வெளியேறினார்.

 

வாண்டர்ட் 3 ரன்களுடனும், சமிந்தா வாஸ் 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

இன்னும் நான்கு நாள் ஆட்டம் மீதம் உள்ளது.

 

-----------

 

சச்சின் சாதனை

 

இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்கும் 150 வது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும், சர்வதேச அளவில் 3-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

 

168 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் முதல் இடத்திலும், 156 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

 

நன்றி, வணக்கம்

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive