Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 13th August 2008
மும்பை, ஆகஸ்டு, 11: இலங்கையில் துவங்கவிருக்கும் ஒருதினத்தொடருக்கான இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டதால் இத்தொடரில் அவர் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்து விட்டது. 
இந்நிலையில் வரும் 18-ம் தேதி முதல் துவங்க இருக்கும் ஒரு தினத் தொடரில் விளையாடவுள்ள ஒருதின அணியை வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழு கடந்த 7-ம் தேதி மும்பையில் தேர்வு செய்தது. 
அப்போது, காயம் காரணமாக உடற்தகுதி பிரச்னையால் சமீபத்தில் நடைபெற்ற ஓருதின தொடர்களில் இருந்து விலகிக்கொண்ட சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஒருதினத் தொடரிலும் இடம்பிடித்திருந்தார். 
ஆனால் கொழும்புவில் நடைபெற்ற 3-வது கிரிக்கெட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் அடித்த பந்தை பாய்ந்து பிடிக்க முயன்றபோது இடது முழங்கையில் சச்சின் தெண்டுல்கருக்கு காயம் ஏற்பட்டது. வீக்கம் அதிகமானதால் காயம் குணமாக 2 முதல் 3 வாரங்கள் ஆகலாம் என இந்திய அணியின் உடலியக்க வல்லுனர் தெரிவித்தார். 
அவருக்கு பதிலாக தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, ஓரு தினத் தொடரில் சச்சின் தெண்டுல்கர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய அணி விவரம்: மஹேந்திரசிங் தோனி (கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பிர், யுவராஜ்சிங் (துணை கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, பார்த்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), சுப்ரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், பிரவீண் குமார், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, முனாப் படேல், ஆர்.பி.சிங். 
இலங்கையுடன் மோத உள்ள 5 ஒருதினப்போட்டிகளின் விவரம்: முதல் போட்டி ஆகஸ்டு 18-ஆம் தேதியும், 2-வது போட்டி ஆகஸ்டு 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளும் தம்புல்லா மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற உள்ளது. 
3-வது போட்டி ஆகஸ்டு 24-ஆம் தேதியும், 4-வது போட்டி ஆகஸ்டு 26-ஆம் தேதியும், 5-வது போட்டி ஆகஸ்டு 28-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த கடைசி மூன்று போட்டிகளும் கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.