CricketArchive

ஒருதின பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி
by CricketArchive


Scorecard:Sri Lankan XI v Indians
Event:India in Sri Lanka 2008

DateLine: 16th August 2008

 

கொழும்பு, ஆகஸ்டு, 16: கொழும்புவில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் யுவராஜ்சிங்கின் அதிரடி சதம் கைகொடுக்க இந்திய அணி, இலங்கை லெவன் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது. இநனையடுத்து வரும் 18ம் தேதி முதல், 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடர் துவங்குகிறது.

 

இதற்கு முன்னதாக நேற்று கொழும்புவில் உள்ள சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை லெவன் அணியும், இந்திய அணியும் மோதிய 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டி நடைபெற்றது.

 

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக்கிற்கு பதிலாக விராட் கோஹ்லி இடம் பெற்றார். பூவா தலையா வென்ற வென்ற வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான கௌதம் காம்பீரும், விராட் கோஹ்லியும் அதிரடி துவக்கம் தந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கௌதம் காம்பிர் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களுக்குப் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஜோடியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுரேஷ் ரெய்னா 57 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

அசத்தலாக ஆடிய யுவராஜ்சிங் 97 ரன்கள் எடுத்த போது பெர்னாண்டோ பந்தில் பவுண்டரி அடித்து (95 பந்துகளில்) சதம் கடந்தார். சதம் அடிப்பதற்கு 95 பந்துகளை எதிர்கொண்ட யுவராஜ்சிங் அடுத்த 72 ரன்களை சேர்ப்பதற்கு வெறும் 16 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டார். ஜேகன் முபாரக் வீசிய 44வது ஓவரில் 4 இமாலய சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இவர் 121 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 172 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ரன்களை குவித்தது.

 

மஹேந்திர சிங் தோனி 20 ரன்களுடனும், இர்பான் பதான் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை லெவன் அணிக்கு மைக்கேல் உடவட்டேயும், உபுல் தரங்காவும் நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். உடவட்டே 20 ரன்கள் எடுத்திருந்த போதும், இவரையடுத்து வந்த வர்ணபுரா 10 ரன்கள் எடுத்திருந்த போதும் இர்பான் பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஆனால் இவர்களையடுத்து கபுகேதராவுடன் ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா சரியாக 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கபுகேதரா 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

 

பிறகு வந்த சமரசில்வா, முபாரக் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 ரன்கள் எடுத்து இருந்த போது சமரசில்வா, பிரக்யான் ஓஜா சுழலில் வெளியேறினார். அதன்பிறகு முபாரக் 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இலங்கை லெவன் அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கவுசல் சில்வா 38 ரன்களுடனும், திலன் துஷாரா 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

இந்திய தரப்பில் இர்பான் பதான் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, முனாப் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

பயிற்சி போட்டி முடிந்ததை தொடர்ந்து, இந்தியா-இலங்கை மோதும் முதல் ஒரு போட்டி வரும் 18-ம் தேதி தம்புல்லா மைதானத்தில் துவங்குகிறது.

 

ஒருதினத் தொடருக்கு முன் கிடைத்த இவ்வெற்றி இந்திய வீரர்களுக்கு மனதளவில் நம்பிக்கையை தரும். ஆனால் இப்போட்டியில் முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் இருவரும் விளையாடாமல் போனதால், அவர்களை எதிர் கொள்ளும் வாய்ப்பு இந்திய ஒரு தின அணிக்கு கிடைக்கவில்லை. இதனால் ஒருதினத் தொடரில் இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் எப்படி இந்திய ஒருதின வரர்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

 

---------------

 

இலங்கையில் இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம்

 

இப்பயிற்சிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள், சரவணமுத்து மைதானத்தில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடினர். கேப்டன் மஹேந்திரசிங் தோனி தேசியக் கொடியை ஏற்றிவைக்க, சக வீரர்கள் உற்சாகமாக தேசிய கீதம் இசைத்தனர்.

 

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கூறியதாவது: ''எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை படித்த 14 ஆண்டுகளில், ஒரு முறை கூட சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை நான் தவறவிட்டது இல்லை'' என்றார் தோனி.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive