CricketArchive

முதல் ஒருதினப் போட்டி: இலங்கை வெற்றி..!
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Player:BAW Mendis
Event:India in Sri Lanka 2008

DateLine: 19th August 2008

 

வணக்கம்,

 

கொழும்பு, ஆகஸ்டு, 18: தம்புல்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற ஒருதினப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது. இதனையடுத்து இன்று முதல், 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடர் துவங்குகிறது.

 

இத்தொடரின் முதல் ஒருதினப்போட்டி, இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் இன்று துவங்கியது.

 

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக்கிற்கு, பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. இவருக்கு பதிலாக விராட் கோஹ்லி இடம் பெற்றார். பூவா தலையா வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கௌதம் காம்பீரும், விராட் கோஹ்லியும் வந்தனர். ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் காம்பீர் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார். இது, ஒருதின அரங்கில் வாஸ் வீழ்த்தும் 399 வது விக்கெட்டாகும்.

 

இதையடுத்து விராட் கோஹ்லியுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். விராட் கோஹ்லி 12 ரன்களில் குலசேகரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவருக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவுடன், யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார்.

 

மிக நிதானமாக ஆடிய சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து குலசேகரா பந்துவீச்சில் வெளியேறினார். இவரையடுத்து யுவராஜ் சிங்குடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். முதலில் நிதனமாக ஆடிய யுவராஜ், பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

 

யுவராஜ்சிங் அதிரடியாக இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அப்போது அஜந்தா மெண்டிஸ் பந்துவீச வந்தார்.அவர் வீசிய முதல் பந்தை யுவராஜ்சிங் எதிர் கொண்டார். அந்த பந்து அவரது காலில் பட, அதை எல்.பி.டபிள்யூ என அறிவிக்கும்படி நடுவரிடம் முறையிட்டார் மெண்டிஸ். ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை. இதற்கடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார் யுவராஜ்சிங். ஆனால் அடுத்த பந்திலேயே அந்த நம்பிக்கை தகர்ந்தது. மூன்றாவது பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார் யுவராஜ்சிங். இவரது கணக்கில் 23 ரன்கள் அடங்கும்.

 

இவரையடுத்து ரோஹித் சர்மாவுடன் இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி ஜோடி சேர்ந்தார். இவர் வந்த அடுத்த சில நிமிடங்களில் ரோஹித் சர்மா 19 ரன்கள் எடுத்த திருப்தியில் வெளியேறினார். தோனி 6 ரன்கள் அடித்ததே பெரிது என்பது போல் அஜந்தா மெண்டிஸ் சுழலில் ஜெயவர்தனேவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். இர்பான் பதான் 7 ரன்கள் எடுத்திருந்தபோது (சர்ச்சைக்குரிய முறையில்) ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். முரளிதரன் வீசிய பந்து, முதலில் பேட்டில் பட்டபிறகு, காலில் பட்டதை கவனிக்கத் தவறிய கள நடுவர், இர்பான் பதான் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

 

இப்படி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 28.3 ஓவர்களில் 87 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. 100 ரன்களை இந்திய அணி தாண்டுமா என்று சந்தேகம் வந்து விட்டது.

 

ஆனால் அந்த சந்தேகத்தை பின்னால் வந்த டெயிலெண்டர்கள் போக்கினர். ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா 12 ரன்கள் எடுத்து முரளிதரன் சுழலில் வீழ்ந்தனர். கடைசி விக்கெட்டாக களமிறங்கிய முனாப் படேல் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 15 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். பிரக்யான் ஓஜா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

முடிவில் இந்திய அணி 46 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இலங்கை அணி தரப்பில் அஜந்தா மெண்டிஸ், முரளிதரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குலசேகரா 2 விக்கெட்டுகளையும், சமிந்தா வாஸ், திலன் துஷாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு சனத் ஜெயசூர்யாவும், சங்ககாராவும் நிதானமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சனத் ஜெயசூர்யா 10 ரன்கள் எடுத்திருந்த போதும், சங்ககாரா 19 ரன்கள் எடுத்திருந்த போதும் முனாப் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

 

ஆனால் இவர்களையடுத்து வந்த மஹேல ஜெயவர்தனே, கபுகேதரா ஜோடி சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வெற்றி பெறவைத்தது. இலங்கை அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

மஹேல ஜெயவர்தனே 61 ரன்களுடனும், கபுகேதரா 45 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

இந்திய தரப்பில் முனாப் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருதினப் போட்டி நாளை மறுநாள், இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive