CricketArchive

அஜந்தா மெண்டிஸ்
by CricketArchive


Player:BAW Mendis

DateLine: 19th August 2008

 

முழுப்பெயர்: பலப்புவடுகே அஜந்தா வின்ஸ்லோ மெண்டிஸ்

 

பிறப்பு: 11 மார்ச் 1985. மொரட்டுவா, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: சுழற்பந்து வீச்சாளர்.

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, இலங்கை இராணுவ அணி, வயம்பா அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஜூலை 23-26, 2008 அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 10, 2008 அன்று மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை இடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: பிப்ரவரி 28, 2007 அன்று இலங்கை ராணுவ அணி - ராகமா கிரிக்கெட் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் புதிய சுழற்பந்து நட்சத்திரம். முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடிக்கும் தகுதி வாய்ந்தவர். இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை லெப்டினென்ட் ஆக பதவி வகிப்பவர். அந்நாட்டு ராணிவ கிரிக்கெட் அணியில் இருந்தவர் அஜந்தா மெண்டிஸ்.

 

இலங்கையிலுள்ள சிற்றூர்களில் ஒன்றான மொரட்டுவாவில் பிறந்தவர். இவருடைய பெற்றோருக்கு 5 பிள்ளைகள். இவர் மூன்றாவது பிள்ளை. அக்கிராமத்தில் உள்ளபுனித அந்தோனியர் கல்லூரியில் ஆரம்பகால படிப்பை படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடுவதற்கான எந்த வசதிகளும் இல்லை.

 

அதனால் மொரட்டுவாவில் உள்ள மஹா வித்யாலாயாவில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்று விடுவார். அங்கு இவரது கிரிக்கெட் திறமையை அப்பள்ளியின் பயிற்சியாளர் லக்கி ரோஜர் கண்டு கொண்டார். பின், அவருக்கு சரியான முறையில் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது மெண்டிசுக்கு வயது 13 தான் இருக்கும்.

 

இதன்பிறகு 15க்குட்பட்டோருக்கான பள்ளி அணியில் இடம்பிடித்து கேப்டனாகவும் விளையாடினார். இவரது சுழற்பந்து வீச்சு, எதிராளியை எளிதில் ஏமாற்றியது. லெக் பிரேக், ஆப் பிரேக், கூக்ளி என மாற்றி மாற்றி விக்கெட்டுகளை சுழற்றினார். இதனால் 2001 மற்றும் 2002 ஆண்டுகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

இலங்கை ராணுவ கிரிக்கெட் குழுவிற்கு எதிராக இவர் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்துவீச, இவரது திறமையை இராணுவ கிரிக்கெட் குழு கண்டு கொண்டது. இதனால் இராணுவ கிரிக்கெட் குழு அணியிலும், இலங்கை ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 

இலங்கை ராணுவத்திற்கான பீரங்கிப் படைப் பிரிவில் இவர் பணியாற்றினார். கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றதால், இலங்கை ராணுவம் இவருக்கு சார்ஜண்டாக பதவி உயர்வு கொடுத்தது.. இதற்கு அடுத்த நாளே ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு உதவி, இலங்கை அணியை இவர் வெற்றி பெற வைத்ததால் இரண்டாம் நிலை லெப்டினென்டாக பதவி உயர்வு பெற்றார்.

 

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக இவர் விளையாடியதால், ஏப்ரல் 2008-ல் மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்தார்.

 

ஏப்ரல் 10, 2008 அன்று மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை இடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஒருதினப் போட்டியில் முதன்முதலாக சர்வதேச ஒருதினப்போட்டியில் அறிமுகமானார். அப்போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

2008-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் இவரது திறமை வெளி உலகிற்கு தெரிந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்இவர் 6.3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆசியக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 8 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே, இவர் விளையாடிய ஒரு தினப் போட்டிகளில் சிறந்து பந்து வீச்சாக அமைந்தது. ஆசிய கோப்பையின் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்த இவர், இப்போட்டியின் ஆட்ட நாயகன், மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

 

டெஸ்ட் போட்டியில் இவர் முதன்முதலாக ஜூலை 23-26, 2008 அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

 

கிரிக்கெட்டில் கோரம் பந்துவீச்சுமுறை என்ற புதிய சுழற்பந்துவீச்சின் பிரம்மா இவர். இவர் கட்டை விரலும், பெருவிரலும் இரண்டும் சேர்ந்து பந்தை புதுமுறையில் சுழற்றுகிறது. அது ஆப் பிரேக்கா, லெக் பிரேக்கா, கூக்ளியா என்று பேட்ஸ்மேனால் கணிக்க முடியவில்லை. விக்கெட்டை பறி கொடுத்துவிடுகிறார். இலங்கை அணிக்கு இன்னொரு முரளிதரன் கிடைத்துவிட்டார்.

 

8 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 46 ரன்கள் எடுத்துள்ளார். 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

1 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

வெளியான தேதி: 30. ஜூலை 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive