CricketArchive

பிரவீண் குமார்
by CricketArchive


Player:P Kumar

DateLine: 19th August 2008

 

முழுப்பெயர்: பிரவீண் குமார் சகத் சிங்

 

பிறப்பு: செப்டம்பர் 2, 1986, மீரட், உத்தர பிரதேசம், இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஏர் இந்தியா, இந்தியா ரெட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், உத்தர பிரதேச அணி.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: நவம்பர் 18, 2007 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 3, 2007 அன்று ரயில்வே - உத்தர பிரதேசம் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்தியா கிரிக்கெட் அணியின் புதிய மிதவேகப்பந்துவீச்சாளர். உத்தரபிரதேசத்திலுள்ள மீரட்டில் பிறந்தவர். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஆர்.பி.சிங், முகமது கைப், சுரேஷ் ரெய்னா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் உத்தர பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். இவ்வரிசையில் தற்போது பிரவீண் குமாரும் இடம்பிடித்துள்ளார்.

 

இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியபோது தனது கடுமையான உழைப்பால், கிரிக்கெட் மைதானத்தில் எதையும் சாதிக்கும் திறமையைப் பெற்றிருந்தார். இவரது வேகப்பந்து வீச்சுத்திறமையைக் கண்ட இவரது அணியினர், சிலநேரங்களில் இவரை முதலில் பந்து வீசவும், பாதியில் பந்து வீசவும் பயன்படுத்தினர். அதே போல பேட்டிங்கிலும், இவரை தொடக்க வீரராகவும் களமிறக்கினர்.

 

இவரது திறமை, எப்போது வெளியே தெரியவந்தது என்றால், அது (2005-06) ரஞ்சி கோப்பை போட்டிகளின் போது தெரிய வந்தது. இவர் அறிமுகமான முதல் ரஞ்சிப் போட்டியில், ஹரியானாவிற்கு எதிராக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி உத்தரபிரதேச அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார், மேலும் இந்த ரஞ்சிப்போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளையும், 368 ரன்களையும் குவித்து உத்தரபிரதேச அணி ரஞ்சிக் கோப்பையை வெல்லக் காரணமாயிருந்தார்.

 

இதற்கடுத்து, இரண்டு முதல்தரப் போட்டித் தொடர்களில் விளையாடிய இவர் 90 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் 2007-ம் ஆண்டில் கென்யாவிற்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பிடித்தார்.

 

இப்போட்டித் தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ, கென்யா ஏ அணிகளுக்கிடையே நடைபெற்ற முத்தரப்பு ஒருதினத் தொடரில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர்நாயகன் விருதைப் பெற்றார். இதையடுத்து நடைபெற்ற சேலஞ்சர் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

 

சர்வதேச போட்டிகளில் இவர் முதன்முதலாக நவம்பர் 18, 2007 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் அறிமுகமானார். இத்தொடரின் கடைசி போட்டியில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் இவரது திறமை வெளிப்படவில்லை.

 

2008 ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லிக்கெதிரான இறுதிப் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிக்காட்டினார். இதனால், (2008) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வங்கி கோப்பை முத்தரப்பு ஒருதின தொடருக்கான அணியில் இடம்பிடித்தார். இத்தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இத்தொடரின் தகுதிச் சுற்றில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி ஒருதின அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார். இது இவர் ஆடிய இரண்டாவது ஒருதினப் போட்டி என்பது குறிப்பிடத் தக்கது.

 

இந்திய அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இது இவர் ஆடிய நான்காவது ஒருதினப் போட்டி என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 13 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டித்தொடரில் பங்கேற்றார்.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஒருதினப்போட்டியில் விளையாடினார். தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய ஏ, நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive