Scorecard: | Sri Lanka v India |
Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 30th August 2008
வணக்கம்,
கொழும்புவில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒருதினப் போட்டியில் இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இப்போட்டியில், இந்திய அணி தோற்றுப் போனாலும், தொடரை 3-2 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றது. டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நான்கு ஒருதினப் போட்டிகளின் முடிவில் ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்தாவது ஒருதினப் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த போட்டிகளில் விளையாடிய சுப்ரமணியம் பத்ரிநாத், பீரவீண் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக இர்பான் பதான், பிரக்யான் ஓஜா, ஆர்.பி.சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப் பட்டது. அதே போல் இலங்கை அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. முரளிதரன், சமிந்தா வாஸ், திலகரத்னே தில்ஷான் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜேகன் முபாரக், தில்ஹாரா பெர்னாண்டோ, உடவாட்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இத்தொடரில் முதன் முறையாக பூவா தலையா வென்ற இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக ஜெயசூர்யாவும், வர்ணபுராவும் களமிறங்கினர். நான்காவது போட்டியில் அதிரடியாக அரைசதம் கடந்த ஜெயசூர்யா, இம்முறை 1ரன்னுடன் ஆட்டமிழந்தார். இவரை ஜாகிர்கான் வெளியேற்றினார்.
அடுத்து வந்த உடவாட்டே, வர்ணபுராவுடன் ஜோடி சேர்ந்தார். துவக்கத்தில் இந்த ஜோடி மந்தமாக விளையாட, இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரன்வேகம் குறைவதை உணர்ந்த இந்த ஜோடி மெல்ல அதிரடிக்கு மாறியது. இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் 77 ரன்கள் எடுத்தநிலையில், வர்ணபுரா 30 ரன்கள் எடுத்திருந்த போது இர்பான் பதான் பந்து வீச்சில் வெளியேறினார். அதே ஓவரின் 5வது பந்தில் உடவாட்டேவும் ஆட்டமிழக்க, இர்பான் பதான் இலங்கைக்கு இரட்டை அடி கொடுத்தார்.
நான்காவது வீரராக வந்த சங்ககாரா 1 ரன் எடுத்த திருப்தியில், ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனா 12 ரன்களும், கபுகேதரா 26 ரன்களும் எடுத்திருந்தபோது பிரக்யான் ஓஜா சுழலில் சிக்கி வெளியேறினர். இலங்கை 133 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது.
இந்நிலையில் களமிறங்கிய திலன் துஷாரா, ஜேகன் முபாரக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசிக்கட்டத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்தது. ஆர்.பி.சிங் வீசிய 44வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய திலன் துஷாரா 42 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தைக் கடந்தார். மேலும் ஒரு தின அரங்கில் தனது அதிக பட்ச ரன்னையும் பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த முபாரக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி, 46.1 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டியது. இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. துஷாரா 54, முபாரக் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் இர்பான் பதான், பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான், ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கௌதம் காம்பிர், விராட் கோஹ்லி ஜோடி வழக்கம் போல் சுமாரான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 38 ரன்கள் எடுத்தநிலையில் காம்பிர் 11 ரன்கள் எடுத்திருந்த போது, குலசேகரா பந்து வீச்சில் வெளியேறினார். குலசேகராவின் அடுத்த ஓவரில் விராட் கோஹ்லியும் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகள் உட்பட 31 ரன்கள் அடங்கும்.
இவர்களையடுத்து யுவராஜ்சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் கடந்த சுரேஷ் ரெய்னா, இம்முறை 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் இந்திய அணிக்கு டக்வொர்த்- லீவிஸ் விதிமுறைப்படி 44 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பிறகு ரோஹித் சர்மா 1 ரன் எடுத்திருந்த போது தில்ஹாரா பெர்னாண்டோ வீசிய பந்தை தனது முன் காலில் வாங்கினார். இதனை எல்.பி.டபிள்யூ என அறிவிக்கும்படி நடுவரிடம் முறையிட்டார் பெர்னாண்டோ. இது விக்கெட் இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தும் களநடுவர் எல்.பி.டபிள்யூ என அறிவித்தார். இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ்சிங் 17 ரன்கள் எடுத்திருந்த போது மெண்டிஸ் சுழலில் ஸ்டம்புகளை பறி கொடுத்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடும் கேப்டன் மஹேந்திரசிங் தோனியும் இம்முறை கைகொடுக்கத் தவறினார். இவர் ஒரு ரன் எடுத்த திருப்தியில் தில்ஹாரா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்தார். இதையடுத்து இந்தியாவின் தோல்வி உறுதியானது.
இர்பான் பதான் 7ரன்களும், ஜாகிர்கான் 3 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திய அணி 26.3 ஒவரில் 103 ரன்களுக்கு சுருண்டது. இதனால் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய நுவன் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், தில்ஹாரா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது குலசேகராவிற்கும், தொடர்நாயகன் விருது மஹேந்திரசிங் தோனிக்கும் வழங்க்ப்பட்டது.
இப் போட்டியில் தோல்வியடைந்த போதிலும் இலங்கை மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப் பற்றி இந்தியா சாதித்துள்ளது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, தோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடைசியாக முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி கடந்த 1998ல் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றிருந்தது.
நன்றி, வணக்கம்.