CricketArchive

நியூசி. ஏ அணியை வீழ்த்தியது இந்தியா ஏ அணி
by CricketArchive


Scorecard:India A v New Zealand A
Event:International A Team Tri-Series 2008/09

DateLine: 17th September 2008

 

ஹைதராபாத், செப். 17: பத்ரிநாத்தின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய ஏ அணி, நியூசிலாந்து ஏ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

இந்தியா, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து ஏ அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ, நியூசிலாந்து ஏ அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின.

 

பூவா தலையா வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் பத்ரிநாத் முதலில் பீல்டிங் செய்வதாகக் கூறினார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு துவக்கத்திலேயே இந்திய வீரர்கள் அதிர்ச்சி அளித்தனர்.

 

துவக்க வீரர்களாக வாட்லிங்கும், மார்டின் குப்டில்லும் களமிறங்கினர். வாட்லிங் 1 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். குப்டில் ரன் ஏதும் எடுக்காமல் பிரவீண்குமார் பந்துவீச்சில் வீழ்ந்தார். இவரையடுத்து வந்த நியூசிலாந்து ஏ அணியின் கேப்டன் ஜேம்ஸ் மார்ஷல் 1 ரன் எடுத்திருந்தபோது, அவரை இர்பான் பதான் வெளியேற்றினார். இதனால் அந்த அணி 6.2 ஓவர்களில் 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

 

இவர்களுக்குப் பிறகு பீட்டர் புல்டனும், நெயில் புரூமும் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய நெயில் புரூம் 57 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

பீட்டர் புல்டனுடன் கிரான்ட் எலியட் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய பீட்டர் புல்டன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யூசுப் பதான் பந்துவீச்சில் வெளியேறினார். இவரையடுத்து வந்த ரீஸ் யங் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார்.

 

எலியட்டுடன் ஜோடி சேர்ந்த நாதன் மெக்கல்லம் நிதானமாக ஆடினார். இவர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து ஏ அணி 44.5 ஓவர்களில் 167 ரன்களுக்குள் சுருண்டது. கிரான்ட் எலியட் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்திய ஏ அணி சார்பில் பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகளையும், பிரவீண் குமார் 2 விக்கெட்டுகளையும், யூசுப் பதான், இர்பான் பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய ஏ அணி களமிறங்கியது. ஸ்வப்னில் அஸ்நோத்கரும், ராபின் உத்தப்பாவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அஸ்நோத்கர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ஒரு பவுண்டரி அடித்த திருப்தியோடு வெளியேறினார்.

 

அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களையடுத்து கேப்டன் பத்ரிநாத்தும், ரோஹித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து பத்ரிநாத்துடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர்.

 

நிதானமாகவும் நேர்த்தியாகவும் கேப்ட்ன் இன்னிங்ஸ் ஆடிய பத்ரிநாத் 64 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறு முனையில் டெஸ்ட் போட்டியைப் போல் ஆடிய தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜீதன் படேல் சுழற்ப்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து வந்த யூசுப் பதான், ஜீதன் படேல் வீசிய அதே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்ஸர்கள் விளாசினார். அதிரடியாக விளையாடிய இவர் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 34 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

கேப்டன் இன்னிங்ஸை ஆடிய பத்ரிநாத் 88 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

 

முடிவில் இந்திய ‘ஏ’ அணி 34.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

நியூசிலாந்து ஏ அணி சார்பில் கில்லெஸ்பி 2 விக்கெட்டுகளையும், மைக்கேல் மேசன், எலியட், நாதன் மெக்கல்லம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து இந்தியா ஏ அணியும், நியூசிலாந்து ஏ அணியும் மோதும் அடுத்த போட்டி வரும் 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிது.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive